உலகளவில் உயர்நிலை வேதியல் கற்கும்
மாணவர்கள் துணுக்க வேதியல், புள்ளியிய எந்திரவியல் போன்ற கோட்பாட்டுப் பாடங்களைப்
படிக்குமுன் தெரிந்துகொள்ளவேண்டிய கணித அடிப்படை நூல்கள் ஆங்கிலத்திலும்
இருப்பதாகத் தோன்றவில்லை. இளங்கலை வகுப்புகளில் அவர்கள்
படிக்கும் கணிதத்துக்கும் இந்த முதுகலை பாடங்களுக்குத் தேவையான கணிதத்துக்குமிடையே
ஒரு இடைவெளி உள்ளது. தளவணிகள், நேரிய
இயற்கணிதம், பான்மைமதிப்புகளும் பான்மைச்சார்புகளும்,
வகையீட்டுச்சமன்பாடுகளின் தொடர்த்தீர்வுகள், தொகுதிக்கோட்பாடு,
நிகழ்தகவுகோட்பாடு, உதிரி மற்றும்
தொடர்ச்சியான வாய்ப்புசார் நிகழ்முறைகள் போன்ற பாடங்களை வேதியலுக்குத்தேவையான
அளவில் தொகுத்து ஒருமிக்க வழங்குவதே இந்நூலின் நோக்கம். வேதியலை
கற்பிக்க முயலாமல் கோட்பாட்டுவேதியலுக்கான கணிதமுறைகளை மட்டும் இந்நூலில்
வழங்குகிறேன். இயல் நிகழ்முறைகளின் கணிதவொப்புருவாக்கத்தையும் அவ்வாறான ஒப்புருக்களின்
கணிதத்தீர்வுகளையும் வேறுபடுத்திக்காண இந்த நூலின் அணுகுமுறை உதவும். கணிதத்தை தனிப்படுத்தியபின் கணிதவிவரங்கள் மாணவர்களின் கவனத்தை சிதைக்காமல்
அறிவியலை கற்பிப்பது வசதியாகும்.
மொழிபெயர்த்த நூல்: ஒன்று, இரண்டு, மூன்று, முடிவிலி – சார்சு கேமாவு George Gamov எழுதிய One, Two, Three, Infinity என்ற ஒரு அறிவியல் விளக்க நூலின் தமிழாக்கம். அணு , விண்மீன் , நெபுலம் , சீர்குலைவு , மரபணு , வெளியை வளைக்கவியலுமா , விண்கலங்கள் குறுகுவதேன் ஆகியவற்றைப்பற்றியும் இதேயளவு ஆர்வமூட்டும் மற்ற தலைப்புகளைப்பற்றியும் இந்த நூலில் விவரிக்கப்போகிறோம் . இயற்கையுலகம் நுண்ணளவிலும் பேரளவிலும் அறிவியலாளரின் கண்களுக்கு இன்று தோன்றுகிறபடி ஒரு பொதுவான சித்திரத்தை வாசிப்போருக்கு வழங்கும்பொருட்டு , தற்கால அறிவியலின் அதியார்வமிக்க உண்மைகளையும் , கோட்பாடுகளையும் தொகுப்பதன் ஒரு முயற்சிதான் இந்த நூல் . அடிப்படையறிவியலின் எந்த மூலையும் விட்டுப்போகாமல் , இங்கு கூறப்படும் தலைப்புகள் எல்லாத்துறைகளையும் சுருக்கமாக தொட்டுச்செல்லுமாறு மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன .
கருத்துகள்
கருத்துரையிடுக